மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திலுள்ள தீஸ்கான் பகுதியில், பெற்றோர் மற்றும் அவர்களின் 19 வயது மகன் ஆகிய மூவரும் மலையிலிருந்து விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் வெள்ளிக்கிழமை மதியம் நிகழ்ந்துள்ளது. மொபைல் போன் வாங்கித் தருவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், குணால் முரளிதர் சந்த்குடே (19) என்ற இளைஞர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் காலை 10 மணியளவில் மலைப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவரது பெற்றோர் முரளிதர் சந்த்குடே (48) மற்றும் சங்கீதா சந்த்குடே ஆகியோர் மகனைக் காப்பாற்ற முயன்றனர். காவல்துறையினரும், கிராம மக்களும் இளைஞரைத் தற்கொலை முடிவைக் கைவிடுமாறு சமாதானப்படுத்த முயன்றனர். மேலும், தீயணைப்புத் துறையினர் வந்து கீழே பாதுகாப்பு வலையை அமைக்க முற்பட்ட போதிலும், அந்த இளைஞர் தொடர்ந்து தனது இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார்.
https://twitter.com/i/status/2090764930442215871
பெற்றோர் எவ்வளவோ எடுத்துக்கூறி அமைதிப்படுத்த முயன்றும், குணால் திடீரென மலையிலிருந்து கீழே குதித்தார். அவரைக் காப்பாற்றும் பதற்றத்தில் தந்தையும் பின்னாடியே தாவியதால் அவரும் கீழே விழுந்து உயிரிழந்தார். இதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த தாயும் மலையிலிருந்து கீழே குதித்து பரிதாபமாக உயிரிழந்தார். மூவரின் உடல்களையும் மீட்ட காவல் துறையினர், அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
