அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல்களுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் குழுவுக்குள் தற்போது விரிசல் ஏற்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய அதிருப்தி தலைவர்களில் ஒருவரான சி.வி. சண்முகம், “நாட்டிலேயே முதல்முறையாக அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 162-ஐ பயன்படுத்தி மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி தான்” எனப் பாராட்டிப் பேசினார்.
அதேபோல், மற்றொரு அதிருப்தி தலைவரான நத்தம் விஸ்வநாதனும் பேரவையில் பேச வாய்ப்பளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கு நன்றி தெரிவித்து உரை நிகழ்த்தினார். முன்னதாக, மூத்த தலைவர் தங்கமணி மீண்டும் எடப்பாடியார் அணியில் இணைந்த நிலையில், தற்போது அதிருப்தி பிரிவைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் எடப்பாடியாரை ஆதரித்து வெளிப்படையாகப் பேசி வருவது வேலுமணி அணியினரிடையே பெரும் கலக்கத்தையும், அதிமுகவின் உட்கட்சி அரசியலில் புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
