சபரீசன் அறிக்கை.. கனிமொழி யோசனை.. ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு…. செக் வைத்த உதயநிதி…. அறிவாலயத்தில் பரபரப்பு….

By Nanthini on ஆவணி 21, 2026

Spread the love

=

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள நிலையில், கட்சிக்குள் பெரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திமுக தலைமைத் திட்டம் வகுத்துள்ளது. வரவிருக்கும் காலங்களில் கட்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இளைஞரணி அமைப்பாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி ஆகியோர் முன்வைத்த முக்கிய பரிந்துரைகளுக்குக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

   

கட்சியின் இளைஞரணியில் தீவிரமாகப் பணியாற்றி வரும் 15 முக்கிய நிர்வாகிகளுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். மேலும், அதிக அளவிலான சட்டமன்றத் தொகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து பொறுப்புகளைப் பிரித்து, ஒரு மாவட்டச் செயலாளருக்கு அதிகபட்சமாக 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே, கடந்த ஐந்து ஆண்டுகளில் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வறிக்கையை சபரீசன் தரப்பும் தயார் செய்து சமர்ப்பிக்கவுள்ளது.

   

மறுபுறம், உட்கட்சி ஜனநாயகத்தை உறுதியாகப் பின்பற்றும் வகையில், இனி திமுகவில் எந்தவொரு நிர்வாகி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அதைத் தேர்தல் முறைப்படியே நடத்த வேண்டும் என்ற யோசனையைக் கனிமொழி முன்வைத்துள்ளார். இந்த யோசனைக்கு மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் கட்சிப் பதவிகளுக்கு முறையான உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்படவுள்ளது.

 

மேலும், 70 வயதைக் கடந்த மூத்த மாவட்டச் செயலாளர்களை மண்டல அளவிலான பொறுப்புகளுக்கு மாற்றவும், துணைப் பொதுச்செயலாளர் பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தலைமை திட்டமிட்டுள்ளது. தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் சரியாகச் செயல்படாத நிர்வாகிகளைப் பொறுப்பிலிருந்து விடுவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகையப் பாரிய மாற்றங்கள் மற்றும் கட்சி மறுசீரமைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.