விஜய் அரசின் மிக முக்கியமான நலத்திட்டமான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் அளவிலான தங்க மோதிரம் வழங்கும் பணிக்கான ஒப்பந்தத்தை முன்னணி நகை நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் பெற்றுள்ளது. ஏழை மக்களின் நலன் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு சுமார் 755 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்த மாபெரும் திட்டத்தின் மூலம் வருடா வருடம் சுமார் 4.41 லட்சம் குழந்தைகள் பயனடைய உள்ளனர்.
தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் நடத்திய இந்த டெண்டரில் ஒரு முக்கிய விதிமுறை பின்பற்றப்பட்டது. அதாவது, மோதிரத்திற்கான 22 கேரட் தங்கத்தின் அடிப்படை சந்தை விலை அனைவர்க்கும் சமமாக நிர்ணயிக்கப்பட்டதால், அதனை உருவாக்குவதற்கான செய்கூலி, ஹால்மார்க் முத்திரை, பாதுகாப்புடன் கூடிய பேக்கிங் மற்றும் மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்க்கும் போக்குவரத்து செலவுகளுக்கான தொகையை மட்டுமே ஏலத்தில் கேட்க வேண்டும். இந்த நிபந்தனையின் அடிப்படையில் ஏலத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான முன்னணி நகைக்கடை நிறுவனங்கள் ஒரு மோதிரத்திற்கு 400 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை கூடுதல் கட்டணத்தை நிர்ணயம் செய்திருந்தன.
இந்த போட்டியில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் மேற்கண்ட அனைத்து கூடுதல் சேவைகளுக்கும் சேர்த்து ஒரு மோதிரத்திற்கு வெறும் ஒரு பைசாவை மட்டுமே கட்டணமாகக் கோரியது. பேக்கிங், செய்கூலி மற்றும் இதர விநியோக செலவுகள் முழுவதையும் தன் பொறுப்பிலேயே ஏற்றுக்கொண்ட இந்நிறுவனம், மிகக் குறைந்த கட்டணத்தைப் பதிவு செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது குறைந்த விலையை கோரிய ஜிஆர்டி நிறுவனம் 410 ரூபாய்க்கு மேல் கேட்டிருந்த நிலையில், எந்தவித லாப நோக்கமும் இன்றி வெறும் ஒரு பைசா என்ற ஜாய் ஆலுக்காஸின் வியூகமே அவர்களுக்கு இந்த மெகா டெண்டரை வென்று தந்துள்ளது.
