1984 சீக்கியர் கலவரத்தின் முக்கிய புள்ளி… திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமார் மரணம்… சோகத்தில் ஆழ்ந்த அரசியல் களம்…!!

By Gayathri on ஆவணி 20, 2026

Spread the love

1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருந்த முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமார், தனது 80-ஆவது வயதில் காலமானார். டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர் இரண்டு கலவர வழக்குகளில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.

டெல்லி கன்டோன்மென்ட் பகுதிக்குட்பட்ட பாலம் காலனியில் ஐந்து சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், அங்குள்ள குருத்வாரா எரிக்கப்பட்டதற்கும் இவரே காரணம் என நிரூபிக்கப்பட்டதால், 2018 டிசம்பரில் டெல்லி உயர் நீதிமன்றம் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதேபோல், 1984 நவம்பரில் சரஸ்வதி விஹார் பகுதியில் ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகிய இருவர் இரும்பு கம்பி மற்றும் குச்சிகளால் தாக்கப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கிலும் இவர் கடந்த பிப்ரவரி 2025-இல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அதற்காக மற்றொரு ஆயுள் தண்டனையையும் பெற்றார்.

   

மேற்கண்ட இரு வழக்குகளிலும் தண்டனை பெற்றிருந்தாலும், சுல்தான்புரி வன்முறை வழக்கில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டார். கலவரத்தின்போது டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் மூன்று சீக்கியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், சஜ்ஜன் குமார் வன்முறை கும்பலைத் தூண்டிவிட்டதாக சிபிஐ தரப்பு சாட்சியான சாம் கவுர் என்பவர் குற்றம் சாட்டியிருந்தார். எனினும், அந்த வழக்கிலிருந்து 2023 செப்டம்பர் மாதத்தில் அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.