“அதிகாரியா? இல்லை வியாபாரியா?”… 20% கமிஷன் கேட்டு பேரம் பேசி சிக்கிய வனச்சரகர்… லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்ட அதிகாரி…!!

By Gayathri on ஆவணி 20, 2026

Spread the love

தென்காசி மாவட்டம், சிவகிரி மற்றும் புளியங்குடி வனப்பகுதிகளில் யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக அகழி அமைக்கும் பணிகளைச் சென்னையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுரேஷ்குமார் என்பவர் மேற்கொண்டு வந்தார். இந்தப் பணிகளுக்கான தொகையை வழங்குவதற்கும், மேற்கொண்டு பணிகளைத் தொடர்வதற்கும், சிவகிரி வனச்சரக அலுவலரான கதிரவன் பில் தொகையிலிருந்து 20 சதவீதத்தை லஞ்சமாகக் கேட்டு ஒப்பந்ததாரரைத் தொடர்ந்து நிர்ப்பந்தித்துள்ளார்.

ஏற்கனவே பெறப்பட்ட ரூ.18.45 லட்சம் பில் தொகைக்கு, ரூ.3.69 லட்சத்தை கமிஷனாகத் தர வேண்டும் என்றும், இல்லையெனில் பணிகளை முடக்குவேன் என்றும் கதிரவன் மிரட்டியுள்ளார். இவ்வளவு பெரிய தொகையைத் தர இயலாது என சுரேஷ்குமார் மறுத்ததால், முதல் தவணையாக ஒரு லட்ச ரூபாயை உடனடியாகத் தர வேண்டும் என வனச்சரக அலுவலர் பேரம் பேசியுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத ஒப்பந்ததாரர், இது குறித்து உடனடியாகத் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

   

புகாரை ஏற்றுக்கொண்ட ஊழல் தடுப்புப் பிரிவினர், லஞ்சம் கேட்ட அதிகாரியைப் பிடிக்கத் திட்டம் தீட்டினர். அதன்படி, ரசாயனம் தடவப்பட்ட ஒரு லட்ச ரூபாயை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், சிவகிரியில் உள்ள கதிரவனின் வீட்டில் வைத்து சுரேஷ்குமார் வழங்கினார். அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், பணத்தைப் பெற்ற வனச்சரக அலுவலரைக் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். வனத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.