கரூர் மாவட்டம், என்.எஸ்.கே நகரைச் சேர்ந்த பிரியா (40) என்ற பெண், சுதந்திர தினத்தன்று தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈரோடு மாவட்டம் வருந்தியபாளையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். கரூர் – கோவை சாலையில் உள்ள வேட்டமங்கலம் தனியார் பள்ளி அருகே அவர் சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த நபர் ஒருவர் திடீரென அவரது தங்கத் தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்றார். சாமர்த்தியமாகச் செயல்பட்ட பிரியா, ஸ்கூட்டரின் வேகத்தை அதிகரித்துச் தப்பியதால், சங்கிலி பறிபோகாமல் தப்பியது.
இச்சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் பிரியா அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தனியார் பள்ளியின் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சங்கிலி பறிப்பில் ஈடுபட முயன்ற நபரின் உருவம் தெளிவாகப் பதிவாகியிருந்தது. ஆனால், அவர் பயன்படுத்திய பைக்கில் பதிவு எண் இல்லாததால், உருவ அமைப்பைக் கொண்டு காவல்துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி விசாரணையில், மூலிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் (29) என்பவரைப் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புகழூர் நகரச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நந்தகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
