அண்ணா அறிவாலயத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மதுரையில் தென் மண்டல வழக்கறிஞர்கள் கூட்டம் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆளும் கட்சியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, காவல்துறையை ஏவி அரசை விமர்சித்து பேசுபவர்களை உடனடியாக கைது செய்யும் போக்கு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறும் நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டிப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் வழக்கறிஞர் அணியை மறுசீரமைத்து, இளைஞர்களுக்கு முக்கிய தலைமைப் பொறுப்புகளை வழங்குவது குறித்தும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற சட்டவிரோத கைது நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வது குறித்து வழக்கறிஞர்களுக்கு விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. இனி வரும் நாட்களில் டெல்டா மற்றும் கோவை மாவட்டங்களிலும் மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும், இறுதியாக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்ட வழக்கறிஞர்கள் மாநாடு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) சரிபார்ப்புப் பணிகள் குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். 2024-இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த ரிட் மனு இன்னமும் நிலுவையில் உள்ள நிலையில், கொளத்தூர் தொகுதியில் சரிபார்க்கப்பட்ட EVM இயந்திரங்களில் 30% அளவிற்கு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். எனவே, இதற்கு சட்ட ரீதியாக தீர்வு காண்பதுடன், EVM இயந்திரங்களின் பயன்பாட்டைக் குறைத்து மீண்டும் பழைய காகித வாக்குச் சீட்டு முறையைக் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மறுபுறம், திமுக தலைவர்கள் மீது இணையதளங்களில் திட்டமிட்டு பரப்பப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற தீவிரமான புகார்கள் மீது காவல்துறை எஃப்.ஐ.ஆர் (FIR) கூட பதிவு செய்யாததற்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், இந்த வழக்கு அடுத்த வாரம் உயர்நீதிமன்ற விசாரணைக்கு பட்டியலிடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
