தவெக ஆட்சியின் 100 நாட்கள் நிறைவடைந்துள்ள சூழலில், தமிழக அரசின் சுதந்திர தின விழா நிகழ்வுகள் மற்றும் முதல்வர் விஜய்யின் உரையைச் சுட்டிக்காட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை புனித சார்ஜ் கோட்டையில் நடைபெற்ற நாட்டின் சுதந்திர தின விழாவில், முதல்வர் விஜய் தேசியக் கொடியேற்றி உரையாற்றினார். அவ்வுரையில், “மக்களே, ஓட்டு போட்டு முதல்வரை ஆக்கியாச்சு, நம்ம கடமை முடிஞ்சுச்சு என என்னை விட்டு ஒதுங்கி விடாதீர்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதனைச் சுட்டிக்காட்டிய உதயகுமார், ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே மக்கள் தவெக அரசிடமிருந்து விலகத் தொடங்கிவிட்டதை உணர்ந்தே முதல்வர் அவ்வாறு பேசியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தவெக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும், 100 நாள் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்களையும் முழுமையாகச் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளதாக உதயகுமார் சாடியுள்ளார். மேலும், தேர்தலுக்கு முன்பாகப் பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் நடமாட்டம் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்து வீறாப்புடன் பேசிய விஜய், தற்போது கோட்டைக்கு வந்த பிறகு மௌனம் காப்பதாகவும், இதனால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் கோபமும் நிலவுவதாகவும் அவர் விமர்சித்தார்.
சுதந்திர தின விழாவில் முன்வரிசையில் அமைக்கப்பட்ட இருக்கைகள் குறித்தும் முன்னாள் அமைச்சர் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். விழாவின் முதல் வரிசையில் முதல்வரின் பெற்றோருக்கு இடம் ஒதுக்கப்பட்டதற்குப் பக்கத்திலேயே, நடிகை திரிஷா உள்ளிட்ட அன்பிற்குரியவர்களுக்கு வி.வி.ஐ.பி அந்தஸ்தில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தவறான முன்உதாரணம் என்று அவர் குறிப்பிட்டார். தியாகத்தைப் போற்றும் அரசு விழாவில் இத்தகைய அரியணை மரியாதையைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் தற்போதைய ‘ஜென் ஜி’ தலைமுறைக்கு முதல்வர் என்ன செய்தியைச் சொல்ல வருகிறார் என்றும் அவர் வினா எழுப்பினார்.
கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையைத் தனது அன்பிற்குரியவர்களுக்குப் பகிர்ந்தளித்த காட்சி தமிழ்நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவித்த உதயகுமார், “ஒருவேளை தமிழ்நாட்டின் அரியணையையும் தனது அன்புக்குரியவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பாரோ? மேடம் திரிஷா அவர்களைத் தனது அரியணைக்கு பக்கத்து அரியணையில் துணை முதல்வராக அமர்த்தி விடுவாரோ?” எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மாற்றம் கேட்டு வாக்களித்த மக்களுக்கு, அறம் சார்ந்த வழிகாட்டுதலைத் தராமல் இத்தகைய நிகழ்வுகளை அரங்கேற்றுவது தாய் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடு என்றும் அவர் தனது பேச்சில் வேதனை தெரிவித்துள்ளார்.
