விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள கோட்டையூரைச் சேர்ந்த அய்யனார் என்பவரின் பள்ளி செல்லும் மகளுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்ற இளைஞர் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது தந்தையிடம் கூறியதையடுத்து, ஆத்திரமடைந்த அய்யனார் அந்த இளைஞரை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் உருவானது.
இந்த முன்விரோதத்தின் காரணமாக, ஒரு நாள் இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அய்யனாரை பெரியசாமி மற்றும் அவரது உறவினர்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த சண்டை கைகலப்பாக மாறிய நிலையில், பெரியசாமி தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் தந்தையை சரமாரியாகக் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அய்யனாரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பெரியசாமி, அழகுராஜா மற்றும் கருப்பசாமி ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர். மேலும், சந்தேகத்தின் பேரில் பெரியசாமியின் வீட்டில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், விலங்குகளை வேட்டையாடப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின. அவற்றைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், கைதான மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
