கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள டெங்கானிக்கோட்டை வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தில், பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த 8 வயதுச் சிறுமியை அடையாளம் தெரியாத நபர் கடத்திச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போலப் பள்ளி முடிந்து மாலையில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த அச்சிறுமியை, வழியில் மறைந்திருந்த நபர் வலுக்கட்டாயமாக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுத் தப்பியோடியுள்ளார்.
வீட்டிற்குத் திரும்பிய சிறுமி நடந்த கொடூரத்தைச் பெற்றோரிடம் கூறியதையடுத்து, உடனடியாகச் சிறுவர் உதவி மையத்திற்கு (Child Helpline – 1098) தகவல் தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.தினேஷ் குமார் அவர்களின் உத்தரவின் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் சிறுமியை மீட்டு, முதலுதவியாக டெங்கானிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அச்சிறுமி மாற்றப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் நடந்த இடத்தைக் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.அனிதா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில், இச்சம்பவம் தொடர்பாகப் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள கொடூரக் குற்றவாளியை விரைந்து பிடிப்பதற்காக மாவட்டக் காவல் துறை சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
இக்கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுமியின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் உடனடியாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இக்குற்றத்தில் ஈடுபட்ட நபரைக் தாமதமின்றி கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
