“கனவுக்கு ஏதுங்க வயசு?”… 51 வயதில் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த அசத்தல் நாயகன்… இணையதளத்தில் வைரலாகும் சம்பவம்…!!

By Gayathri on ஆவணி 14, 2026

Spread the love

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 51 வயதான சுரேஷ்குமார் என்பவர், மருத்துவப் படிப்பில் சேர்ந்து சாதிக்க வேண்டும் என்ற தனது நீண்ட காலக் கனவை தற்போது நனவாக்கியுள்ளார். பள்ளிப் பருவத்திலேயே மருத்துவராக வேண்டும் என ஆசைப்பட்ட இவரால், சூழ்நிலை காரணமாகத் தனது இலக்கை அப்போது அடைய முடியவில்லை. அதன் பிறகு பல ஆண்டுகள் ரத்தப் பரிசோதனை தொடர்பான சந்தைப்படுத்தல் துறையில் பணியாற்றி வந்தார். எனினும் மருத்துவத்தின் மீதான ஆர்வம் குறையாததால் 2022-ஆம் ஆண்டு நீட் தேர்வை எழுதித் தோல்வியைச் சந்தித்தார். பின்னர், தாயும் மகளும் ஒன்றாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ஒரு செய்தியால் உந்துதல் பெற்ற இவர், மனம் தளராமல் மீண்டும் கடினமாகப் படித்து 2026-ஆம் ஆண்டில் நடந்த நீட் தேர்வை எதிர்கொண்டார்.

இந்தத் தேர்வில் 192 மதிப்பெண்களைப் பெற்ற சுரேஷ்குமார், 2019-ல் தனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் நடைபெற்ற சிறப்பு கலந்தாய்வில் கலந்துகொண்டார். இதன் மூலம் தனது சொந்த ஊரான நாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியிலேயே எம்.பி.பி.எஸ் படிப்பதற்கான இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்காகத் தனது வேலையை விட்டுள்ள அவர், எந்த சவால்கள் வந்தாலும் படிப்பை முழுமையாக முடித்து சிறந்த மருத்துவராகப் பணியாற்றுவேன் என்று உறுதியளித்துள்ளார். இவரின் இந்த விடாமுயற்சி, கனவுகளைத் துரத்திப் பிடிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.