சென்னை காரம்பாக்கத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுநாள் புகழ் வணக்கப் பொதுக்கூட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கூட்டத்தில் உரையாற்றிய அவர், “சைதாப்பேட்டை தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்த அளவிற்கு வேறு யாரும் நலத்திட்டங்களைச் செய்ததில்லை. கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் கூட கொண்டு வர முடியாத அளவிற்கு மிகப்பெரிய மருத்துவமனையை மா.சுப்ரமணியன் அத்தொகுதிக்குக் கொண்டு வந்தார்” எனக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.
இருப்பினும், அதைத் தொடர்ந்து அவர் பேசிய விதம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. “அந்த மருத்துவமனைக்குச் சென்று பயன் அடைந்த நோயாளிகளின் உறவினர்கள் வாக்களித்திருந்தாலே மா.சுப்ரமணியன் தேர்தலில் எளிதாக வெற்றி பெற்றிருப்பார். அவருக்கு வாக்களிக்காத அவர்களுக்கு நல்ல சாவே வராது; உயிரைக் காப்பது அவ்வளவு எளிய காரியமல்ல. இனிமேல் பொதுமக்களுக்காக எதுவும் செய்யத் தேவையில்லை, கட்சிக்காரர்களுக்கு மட்டும் செய்யுங்கள், நாம் ஐந்து ஆண்டுகளுக்கு ஓய்வெடுப்போம்” என்று ஆர்.எஸ்.பாரதி பேசியது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் கடும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.
