“இது ஜப்பானா? இல்ல கேரளாவா?”… இந்திய ரயில் நிலையத்தைப் பார்த்து மிரண்டு போன வடமாநில Vlogger… வைரல் வீடியோ….!

By Nanthini on ஆவணி 14, 2026

Spread the love

பொதுவாகப் பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் என்றாலே அசுத்தமும், கூட்ட நெரிசலும் தான் பலரின் நினைவுக்கு வரும். ஆனால், கேரளாவில் உள்ள காசர்கோடு ரயில் நிலையம் இதற்கு முற்றிலுமாக விதிவிலக்காக அமைந்து, பயணிகளைப் பிரம்மிப்பில் ஆழ்த்தி வருகிறது. பிரபல டிராவல் வ்லாகரான அன்மோல் (Backpacker Anmol) என்பவர் அண்மையில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ மூலம், இந்த ரயில் நிலையத்தின் அசாத்திய தூய்மை தற்போது இணையவாசிகளிடையே பெருமளவில் பேசப்பட்டு வருகிறது.

“இது ஜப்பான் அல்ல, கேரளா!” என்ற தலைப்பில் அன்மோல் பகிர்ந்த அந்த வீடியோவில், காசர்கோடு ரயில் நிலையத்தின் பிளாட்பாரங்கள் மட்டுமின்றி, ரயில் தண்டவாளங்களில் கூட ஒரு சிறு குப்பையைக் கூட பார்க்க முடிவதில்லை என வியப்புடன் குறிப்பிட்டுள்ளார். சிறுவயது முதலே கேரளாவின் உயர் கல்வியறிவு மற்றும் முற்போக்குச் சிந்தனை குறித்துக் கேள்விப்பட்டிருந்த அவர், இந்த ரயில் நிலையத்தின் நேர்த்தியான பராமரிப்பைப் பார்த்த பிறகு அதை நேரில் உணர்ந்து கொண்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

   

இந்தியாவில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் முறையான பராமரிப்பின்மை, குடிநீர் பற்றாக்குறை, அசுத்தமான காத்திருப்பு அறைகள் போன்ற புகார்கள் எழுவது வழக்கமான ஒன்று. ஆனால், காசர்கோட்டில் பளபளக்கும் தரைகள், சுகாதாரம் நிறைந்த குடிநீர் வசதிகள், சீராக இயங்கும் ஏடிஎம்கள், தூய்மையான கழிப்பறைகள் மட்டுமின்றி, பயணிகள் ரிலாக்ஸ் செய்ய மசாஜ் நாற்காலிகள் வரை பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய நவீன வசதிகளும் கட்டமைப்புச் சிறப்பும் ஒரு வெளிநாட்டு ரயில் நிலையத்திற்கு இணையான அனுபவத்தை வழங்குகின்றன.

   

நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போதுமான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருப்பதால், பயணிகளும் பொறுப்புணர்வோடு குப்பைகளை உரிய இடங்களில் மட்டுமே வீசி தூய்மையைப் பேணுகின்றனர். அன்மோலின் இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, கேரள மக்களின் சமூகப் பொறுப்பையும் ரயில்வே நிர்வாகத்தின் திறமையான செயல்பாட்டையும் நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். நாட்டின் பிற ரயில் நிலையங்களுக்கும் சிறந்த முன்மாதிரியாகத் திகழும் காசர்கோடு, இந்தியாவிலும் உலகத்தரத்திலான தூய்மையைப் பராமரிக்க முடியும் என்பதற்குச் சிறந்த சான்றாக மாறியுள்ளது.