“வழியிலேயே காத்திருந்த கணவன்…” பணி முடிந்து வந்த பெண் போலீஸை கத்தியால் குத்திச் சாய்த்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் வாக்குமுலம்…!!

By Gayathri on ஆவணி 14, 2026

Spread the love

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வந்த தாமரைச்செல்வி என்பவர், தனது கணவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநரான அர்வின் என்பவருக்கும், தாமரைச்செல்விக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இருவருக்கும் இடையே சமீபகாலமாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை இரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மனைவியை நெல்லூர்பேட்டை ஏரிக்கரை அருகே வழிமறித்த அர்வின், கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலை, கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த தாமரைச்செல்வியை, அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர், சொந்தக் கணவராலேயே படுகொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலையாளி அர்வினைக் கைது செய்து இச்சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்துத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.