குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆனந்த் நகர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இன்டீரியர் டிசைனிங் பயின்று வரும் மாணவி ஒருவர், கட்டடத்தின் மாடியில் உலாவுவதைக் கண்ட காவலாளி தரம் சிங் என்பவர், அவரைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவி சத்தம் போடாமல் இருக்க அவரது கழுத்தில் கம்பியை இறுக்கிக் கட்டி இந்தக் கொடூரத்தைச் செய்துள்ளார். பின்னர் மாணவியின் மொபைல் போனைப் பிடுங்கிக்கொண்டு, மாடிக் கதவை வெளியே பூட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி கத்திச் கூச்சலிட்டதை அடுத்துக் கீழே இருந்தவர்கள் வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வேலைக்குச் சேர்ந்த 6 நாட்களிலேயே இக்கொடூரத்தைச் செய்த உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபரை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். திருடப்பட்ட போனை மீட்பதற்காகக் குற்றவாளியை அழைத்துச் சென்றபோது, அவன் போலீசாரின் துப்பாக்கியைப் பிடுங்கித் தப்பிக்க முயன்றுள்ளான். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் காவலர் ஒருவர் காயமடைந்த நிலையில், போலீசார் நடத்திய தற்காப்புத் தாக்குதலில் குற்றவாளியின் காலில் துப்பாக்கிச் சூடு பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
