கோவையில் போதைப்பொருள் புழக்கம் குறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்த பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன், சக மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நற்பண்புகளையும் கல்வியையும் கற்றுத்தர வேண்டிய கல்விக்கூடங்களிலேயே போதைப்பழக்கமும் பகைமையும் அதிகரித்து, ஒரு உயிரைப் பறிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருப்பது எதிர்காலத் தலைமுறையின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. தம்பி அமுதனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த கொடூரச் சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ள உண்மைகளை மறைக்கப் பார்க்கும் அரசின் போக்கை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
செட்டிப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு போதைப்பொருள் புழக்கம் குறித்து அமுதன் தகவல் அளித்த பின்னரே, சுமார் 20 பேர் கொண்ட கும்பலால் அவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மாணவனின் பெற்றோர் முன்வைக்கும் இந்த குற்றச்சாட்டு வழக்கின் தீவிரத்தை உணர்த்துகிறது. இருப்பினும், போதைப்பொருள் புழக்கம் என்ற முதன்மைக் காரணத்தைக் கண்டுகொள்ளாமல், இதனை வெறும் ‘மாணவர்களிடையேயான தகராறு’ அல்லது ‘செல்போன் பறித்ததால் வந்த சண்டை’ எனத் திசைதிருப்ப முயல்வது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குச் செய்யப்படும் அநீதியாகும். 20 பேர் சேர்ந்து ஒரு தனிநபரை அடித்துக் கொல்வதை ‘குழு மோதல்’ என்று சட்டப்பேரவையில் கூறுவது அப்பட்டமான மோசடித்தனம் எனச் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆட்சியாளர்களின் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு கொடூரக் குற்றத்தைச் சாதாரண மோதலாகச் சித்தரிப்பது ஜனநாயகத் துரோகமாகும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனையே இல்லை என்று அரசு சாதிக்க முயல்வது உண்மைக்குச் புறம்பானது என்பதோடு, அண்மையில் பள்ளி மாணவன் ஒருவன் கஞ்சா போதையில் தாக்குதல் நடத்திய காணொளிகளே இதற்குச் சான்றாக உள்ளன. தேர்தல் பரப்புரைகளில் தம்மை ‘தாய் மாமன்’ என்று அழைத்துக்கொள்ளும் ஆட்சியாளர்கள், 19 வயதில் கொடூரமாகக் கொல்லப்பட்ட இந்தப் பிள்ளையின் மரணத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்றும், கதறித் துடிக்கும் பெற்றோருக்கு என்ன நீதியைப் பெற்றுத் தரப் போகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இக்கொலை வழக்கில் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறிச் சம்பவத்தை மூடி மறைக்க முயலும் கல்லூரி நிர்வாகத்தின் மீதும், அரசின் மீதும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ள சீமான், உடனடி நடவடிக்கை கோரியுள்ளார். தம்பி அமுதனின் படுகொலை குறித்து எவ்வித ஒளிவுமறைவுமின்றி நேர்மையான நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும், இதில் தொடர்புடைய அனைத்துக் கொலையாளிகளும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்தியுள்ளார்.
