நாகப்பட்டினம் மாவட்டம், விழுந்தமாவடி மீனவ கிராமத்தில் “மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம்!” என்ற சமூக அக்கறையுள்ள முழக்கத்துடன் ஊர் பஞ்சாயத்து சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பேனர் வைக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் பொது அமைதி, இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றை முன்னிறுத்தி இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆகஸ்ட் 2, 2026 முதல் ஊரில் உள்ள திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்துவதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறி இளைஞர்கள் மது அருந்துவது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என ஊர் பஞ்சாயத்து சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கான தடையோடு மட்டுமன்றி, திருமணம் ஆனவர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருமணமானவர்கள் குடிபோதையில் வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ தகராறில் ஈடுபட்டு, அது தொடர்பான பிரச்சனைகள் ஊர் பஞ்சாயத்திற்கு கொண்டு வரப்பட்டால், அவர்களுக்கும் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “இன்றைய சரியான முடிவு, நாளைய சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்” என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் அமைந்துள்ள இந்த முயற்சியை வெற்றிகரமாக்க கிராம மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என பஞ்சாயத்தார்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மது பழக்கத்திலிருந்து சமூகத்தையும் எதிர்கால தலைமுறையையும் பாதுகாக்கும் விழுந்தமாவடி கிராம மக்களின் இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
