“செருப்பு கூட வாங்க வழியில்ல… வாடகை வண்டியில தான் வர்றேன் அய்யா”… தவெக ஆட்சியில் எம்.எல்.ஏ போட்ட குண்டு… அதிர்ச்சியில் முதலமைச்சர்….!

By Nanthini on ஆவணி 12, 2026

Spread the love

காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் வாகன வசதியும், உதவியாளருக்கான ஊதியமும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் பேசியது தற்போதைய சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. தவெக ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பட்ஜெட் மீதான காரசாரமான விவாதங்களுக்கு நடுவே எழும்பிய இந்த எளிய மனிதரின் குரல், அனைத்துத் தரப்பு அரசியல் தலைவர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.

சட்டமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்து வலியுறுத்திய எம்.எல்.ஏ ஜோதிமணி, தான் 280 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வாடகை வாகனத்திலேயே சட்டமன்றத்திற்கு வந்து செல்வதாகவும், சொந்தமாக வாகனம் இல்லாததால் தொகுதி மக்களுக்குப் பணியாற்ற சிரமப்படுவதாகவும் உருக்கமாகத் தெரிவித்தார். மேலும், “இங்குள்ள பல சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் சொந்தமாக வாகனம் கிடையாது; காலணி கூட வாங்க வசதியில்லாத நிலையில் சிலர் மக்கள் பணியாற்றி வருகிறார்கள். ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்க வேண்டுமென்றால், உறுப்பினர்களின் அடிப்படைத் தேவைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

   

இதற்குப் பதிலளித்துப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், உறுப்பினர் தனது நேர்மையான பணிச்சூழலில் சந்திக்கும் நடைமுறைச் சிரமங்களையே அவையில் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டார். “அவையில் வீற்றிருக்கும் முதலமைச்சரின் கரங்கள் அள்ளிக் கொடுக்கும் கரங்கள். எனவே, தற்போதைய உறுப்பினர்கள் மட்டுமன்றி, முன்னாள் உறுப்பினர்கள் நலச் சங்கத்தினர் வைத்துள்ள கோரிக்கைகளையும் நேரடியாக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன்” என்று உறுதியளித்து விவாதத்தை நிறைவு செய்தார்.

   

அரசியல் மேடைகளில் வழக்கமாக எழும் வாக்குவாதங்களுக்கு இடையே, அடித்தட்டு மக்கள் பிரதிநிதியின் உண்மையான பொருளாதார நிலையை வெளிச்சம்பிடித்துக் காட்டிய இந்த விவாதம், சட்டமன்ற வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லஞ்சம் இல்லாத நேர்மையான மக்கள் சேவையை உறுதிப்படுத்த எம்.எல்.ஏ-க்களுக்கு இத்தகைய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்ற ஜோதிமணியின் இந்த உருக்கமான கோரிக்கை, தற்போது சமூக வலைதளங்களிலும் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.