விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவி மட்டுமின்றி, சன் மற்றும் ஜீ தமிழ் போன்ற முன்னணி தொலைக்காட்சிகளின் பல்வேறு மெகா தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சின்னத்திரையைத் தாண்டி வெள்ளித்திரையிலும் தடம் பதித்த இவர், ‘பயர்’, ‘மெய் நிகரே’, ’99/66′, ‘யு ஆர் நெக்ஸ்ட்’ போன்ற சில தமிழ் திரைப்படங்களிலும், ஒரு சில கன்னட படங்களிலும் நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் இவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான அதேசமயம் அதிர்ச்சியளிக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அதாவது, மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான சிட்கோ இணையதளத்தில், அதன் இயக்குநரான டாக்டர் அங்கிதா சிங் என்பவரின் பெயருக்கு நேராக, அவருக்குப் பதிலாக நடிகை ரச்சிதாவின் புகைப்படம் தவறாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் குளறுபடியைப் பார்த்த நெட்டிசன்கள் இணையத்தில் இதை வேடிக்கையாகப் பகிர்ந்து வந்தாலும், பொறுப்புமிக்க ஒரு மத்திய அரசுத் தளத்தில் இவ்வளவு பெரிய கவனக்குறைவு எப்படி நடந்தது என்று பலரும் தங்களது கடுமையான விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர்.
