தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக வருவாய் ஈட்டும் கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கும் 7 பேர் கொண்ட அரசுக் குழுவில், ‘GOAT’ படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல், சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கும் தனது நெருங்கிய வட்டாரங்களுக்கும் முக்கிய அரசுப் பதவிகளை வழங்கி வருவது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே டெல்லி சிறப்பு பிரதிநிதி, செய்தி சரிபார்ப்புக் குழுத் தலைவர், முதலமைச்சரின் தனிச் செயலாளர் எனப் பல உயர் பொறுப்புகள் விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கே வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கோயில் அறங்காவலர் நியமனக் குழுவிலும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சேர்க்கப்பட்டிருப்பது தவெகவின் அடிமட்டத் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் களத்தில் நின்று உழைத்த உண்மைத் தொண்டர்களைப் புறக்கணித்துவிட்டு, சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் தொழில்முறை நண்பர்களுக்கும் அதிகாரப் பதவிகளைப் பகிர்ந்தளிப்பது கட்சிக்குள் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இது தொண்டர்களின் நம்பிக்கையைக் குலைப்பதோடு, மக்கள் மத்தியில் கட்சியின் பிம்பத்தையும் பாதிக்கும் என தவெக நிர்வாகிகள் சிலர் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.
