தமிழ்நாட்டில் நிர்வாகத்தை சீரமைக்கும் நோக்கில் பல்வேறு துறை சார்ந்த புதிய பொறுப்புகளுக்கான நியமனங்களை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் தமிழ்நாடு அரசின் மேலிட பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஆன்மீகம் மற்றும் நிர்வாகத் துறைகளில் முக்கியத்துவத்தைக் கருதி, மாநில அளவில் உள்ள திருக்கோயில்களின் செயல்பாடுகளை மேம்படுத்தப் புதிய திட்டமிடல்களும், அதற்கான அதிகாரப்பூர்வ நியமனங்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 44,000 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காகத் தகுதியான விண்ணப்பதாரர்களைக் கண்டறிந்து தெரிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளன. ஆண்டு வருமானம் ₹10 லட்சத்திற்கும் அதிகமாகக் கொண்ட முதன்மை திருக்கோயில்களுக்கு அறங்காவலர் பெயர்ப் பட்டியலைத் தயாரித்து அரசுக்கு அளிப்பதற்காக ஒரு வலுவான மாநிலக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
முந்தைய மாநிலக் குழுவின் பதவிக்காலம் கடந்த 24.07.2026 அன்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அறநிலையத்துறை ஆணையரின் பரிந்துரையை ஏற்று புதிய உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி K. இராமநாதன் துணைத் தலைவராகவும், தொழிலதிபர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பரா.சம்பத், மா.சுமதி (எ) சுமதிஸ்ரீ, டாக்டர் த.வேல்முருகன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அறநிலையத்துறை ஆணையர் இதன் பதவி வழி உறுப்பினராகச் செயல்படுவார்.
அடுத்த இரண்டு ஆண்டுகள் பதவிக் காலத்தைக் கொண்டுள்ள இந்த மாநிலக் குழு, பெறப்பட்ட விண்ணப்பங்களை முறைப்படி பரிசீலித்துத் தகுதியான நபர்களை அறங்காவலர் பொறுப்பிற்குத் தேர்வு செய்யும். வெளிப்படைத்தன்மையுடனும் தகுதியின் அடிப்படையிலும் அறங்காவலர்களை நியமித்து, திருக்கோயில்களின் சொத்துக்கள் மற்றும் தினசரி நிர்வாகத்தை மேம்படுத்துவதே இக்குழுவின் முக்கிய நோக்கமாகும்.
CM விஜய்யின் பட தயாரிப்பாளர் அர்ச்சனாவிற்கு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது. கோயிலில் பரம்பரை சாரா அறங்காவலர்களை நியமிக்கும் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ‘GOAT’, ‘பிகில்’ போன்ற படங்களை தயாரித்துள்ளார். மேலும், இவர் த்ரிஷாவின் நெருங்கிய தோழியாவார். ஏற்கனவே CM தனது தயாரிப்பாளர் வெங்கட நாராயணனை அரசு பிரதிநிதியாக்கினார். இந்நிலையில், இந்தப் பதவி நியமனம் சர்ச்சையாகியுள்ளது.
