கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பாகலகன்டே பகுதியில் பல நாட்களாகப் பூட்டிக்கிடந்த ஒரு வீட்டில் இருந்து சமீபத்தில் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், அங்கு ஒரு மூதாட்டி முழுமையாக எலும்புக்கூடாகக் கிடப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த 60 வயதான தக்ஷாயிணி என்பது தெரியவந்தது. இவரது கணவர் உமேஷ் பத்து ஆண்டுகளுக்கு முன்பும், மகன் சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயாலும் அடுத்தடுத்து உயிரிழந்ததால் அவர் கடும் மன வேதனையில் இருந்துள்ளார். திருமணமாகி மகள் தன் கணவருடன் தனியாகச் சென்ற நிலையில், அக்கம் பக்கத்தினருடன் அதிக ஒட்டுதல் இல்லாமல் தக்ஷாயிணி இந்த வீட்டில் முற்றிலும் தனிமையிலேயே வாழ்ந்து வந்துள்ளார்.
சுமார் ஓராண்டுக்கு முன்பே அவர் வீட்டிற்குள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பெற்ற மகளும், மருமகனும் கடந்த ஒரு வருடமாக அவரை ஒருமுறை கூட நேரில் வந்து பார்க்கவோ அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளவோ இல்லை என்ற அதிர்ச்சிகரமான தகவலும் தற்போது வெளிவந்துள்ளது. தனிமையில் ஒரு தாய் இறந்து, அவரது உடல் எலும்புக்கூடாக மாறும் வரை யாருக்கும் தெரியாமல் போன இந்தச் சம்பவம் பெங்களூரு மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
