அடுத்தவர்களைப் பற்றிய ரகசியங்களை அறிந்துகொள்வதிலும், அதனை கிசுகிசுவாகப் பேசுவதிலும் மனிதர்களுக்கு எப்போதுமே ஒரு தனி ஆர்வம் உண்டு. நாமெல்லாம் இதுபோன்ற விஷயங்களைக் கேட்பதோடு கடந்து சென்றுவிடுவோம். ஆனால், கொலம்பியாவைச் சேர்ந்த மிர்யம் என்ற மூதாட்டி, இந்த கிசுகிசுக்களை வைத்து ஒரு லாபகரமான தொழிலையே உருவாக்கியுள்ளார். தனது சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், அக்கம் பக்கத்தினரின் அந்தரங்க ரகசியங்களையும் மிகவும் நுட்பமாகத் திரட்டும் இவர், அதனை ஒரு நோட்டுப் புத்தகத்தில் விவரமாகப் பதிவு செய்து கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இவ்வாறு சேகரித்த ரகசியங்களை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை நேரடியாக அணுகும் மிர்யம், அந்தத் தகவல்களை வெளியே சொல்லாமல் இருக்க அவர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் நூதன உத்தியைக் கையாண்டுள்ளார். குறிப்பாக, கள்ளக்காதல் போன்ற சிக்கலான விவகாரங்கள் என்றால் அதற்கு மிக அதிகமான தொகையை வசூலித்துள்ளார். சிலர் தங்களது மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள அவருக்கு 7 லட்சம் ரூபாய் வரை கூடக் கொடுத்துள்ளனர். இந்த மிரட்டல் மூலம் கிடைத்த பெருந்தொகையை வைத்து அவர் இரண்டு வீடுகளைச் சொந்தமாக வாங்கியுள்ளார் என்பதுதான் இதில் மிகப்பெரிய ஆச்சரியம். பலரையும் வியப்பில் ஆழ்த்திய இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை மிர்யம் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் எந்தவிதத் தயக்கமுமின்றி வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
