கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், சுதந்திர தின விழா கலைநிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெற்று வந்தது. அப்போது, அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் ஏழு வயது மாணவியை வீட்டிற்குச் செல்ல அனுமதிக்காமல், ஆங்கில ஆசிரியரான அகஸ்டின் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் 1,500 மாணவர்கள் படிக்கும் அப்பள்ளியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இந்தத் தகவலை அறிந்த சிறுமியின் பெற்றோரும் உள்ளூர் மக்களும் கடும் ஆத்திரமடைந்து பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர். சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பொதுமக்களைத் தடுத்து நிறுத்தி ஆசிரியரை மீட்டுச் சென்றனர். பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் அவர் மீது வழக்குப் பதிவு செய்து தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஆசிரியர் கைது செய்யப்பட்ட தகவல் பரவியதை அடுத்து, பதற்றமடைந்த மற்ற பெற்றோர்கள் உடனடியாகப் பள்ளிக்கு வந்து தங்கள் குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர். மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஆசிரியரே சிறுமியிடம் அத்துமீறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் மற்றும் அத்துமீறல்கள் குறித்துத் தகவல் அளிக்க, பொதுமக்கள் ‘1098’ என்ற இலவச உதவி எண்ணை எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம்.
