“யார் உங்களை போகச் சொன்னது?”…. சேகர்பாபுவுக்கு ஸ்டாலின் கொடுத்த செம டோஸ்…. உதயநிதி கைது சம்பவத்தில் அம்பலமான திமுகவின் உள்வீட்டு பூசல்…!

By Nanthini on ஆவணி 8, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 4-ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் தனது நீலாங்கரை இல்லத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தத் தகவல் பரவியவுடனேயே மா.சுப்பிரமணியன், வழக்கறிஞர்கள் பரந்தாமன், சரவணன் மற்றும் சிற்றரசு ஆகியோர் நீலாங்கரை இல்லத்தில் குவிந்தனர். அவர்களைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவும் அங்கு வந்து சேர்ந்தார்.

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் தஞ்சாவூர் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டபோது, அவருடன் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் சிற்றரசு ஆகிய மூவரும் அதே வாகனத்தில் பயணம் செய்தனர். தஞ்சாவூர் செல்லும் வழியில் இருந்த ஒவ்வொரு டோல்கேட்டிலும் திமுக தொண்டர்கள் திரண்டு, வாகனங்களை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உதயநிதியுடன் ஒரே வாகனத்தில் பயணிப்பதன் மூலம் கட்சி மேலிடத்தின் நன்மதிப்பையும், ‘குட் புக்கில்’ இடத்தையும் பிடித்துவிடலாம் என்பதே இந்த மூவரின் திட்டமாக இருந்தது என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

ஆனால், வெளியூர்களில் தொண்டர்கள் வீதிக்கு வந்து போராடிய அளவிற்கு, தலைநகர் சென்னையில் திமுகவினரின் போராட்டம் பெரிதாக வெடிக்கவில்லை. அறிவாலயம் மற்றும் நீலாங்கரை இல்லத்தின் முன்பாக மட்டுமே சில ஆர்ப்பாட்டங்கள் குறைந்த அளவில் நடைபெற்றன. ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தலில் சென்னையில் திமுக கடுமையான பின்னடைவைச் சந்தித்திருந்த நிலையில், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த திமுக தலைமை திட்டமிட்டு வருகிறது. இத்தகைய சூழலில், சென்னையின் முக்கிய மாவட்டச் செயலாளர்கள் போராட்டம் நடத்தாமல் உதயநிதியுடன் காரில் சென்றது கட்சித் தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

மற்ற மாவட்டங்களில் தொண்டர்களும் நிர்வாகிகளும் வீதியில் இறங்கிப் போராடியபோது, சென்னையில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் போராடாமல் உதயநிதியுடன் பயணித்தது ஏன் என்று கட்சித் தலைவர் ஸ்டாலின் சேகர்பாபுவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “உங்களை யார் உதயநிதியுடன் செல்லச் சொன்னது? சட்டப் போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சென்றால் போதாதா? சென்னையில் போராட்டங்களை ஒருங்கிணைப்பதே உங்கள் முதன்மைப் பணியாக இருந்திருக்க வேண்டும்” என டோஸ் கொடுத்துள்ளார். தலைமையின் இந்த அதிரடி கண்டிப்பால், வழக்கமாகச் சுறுசுறுப்பாக இருக்கும் சேகர்பாபு தற்போது கடும் அப்செட்டில் இருப்பதாக அறிவாலயக் கட்சி நிர்வாகிகளிடையே பேசப்பட்டு வருகிறது.