செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 37 வயது பெண்ணிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல் நடித்து, வீட்டிற்குள் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்பத்தினருடன் அங்கு வசித்து வரும் நிலையில், சம்பவத்தன்று அவர் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், தாகமாக இருப்பதாகக் கூறி குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். அதனை உண்மையென நம்பிய அந்தப் பெண், வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது, அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த அந்த நபர், வீட்டில் வேறு யாரும் இல்லாததை உறுதி செய்துகொண்டு கதவை உள்பக்கமாக பூட்டியுள்ளார். தொடர்ந்து, பெண்ணின் ஆடையைக் கிழித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பேரதிர்ச்சியடைந்த அப்பெண், அவரிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கில் உடனடியாக உதவி கேட்டு உரத்த குரலில் கூச்சலிட்டுள்ளார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் தப்பியோட முயன்ற அந்த நபரைச் சமயோசிதமாக மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை சிங்கப்பெருமாள் கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஸ்ரீனிவாசன் என்பதும், அவர் ஓட்டுநராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காவல் நிலையம் சென்ற பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீனிவாசனை அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதியின் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். பகல் நேரத்திலேயே தனியாக இருந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்து அத்துமீற முயன்ற இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
