மதுரையில் தமிழக வெற்றி க்ழகத்தின் சார்பில் ஒட்டப்பட்டுள்ள புதிய சுவரொட்டிகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளன. மதுரை புறநகர் கிழக்கு ஒன்றிய தவெக சார்பில் நகரின் பல்வேறு முக்கிய இடங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்களுடன் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இணைந்திருக்கும் படங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. மேலும், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், கல்லாணை ஆகியோரின் படங்களும் அந்த விளம்பரப் பலகைகளில் அச்சிடப்பட்டுள்ளன.
“தலைவன்” என்ற கம்பீரமான தலைப்பில் வெளியாகியுள்ள இந்த போஸ்டர்களில், “அங்க போகனும் அவசியம் இல்ல போகனும் நினைச்சாலே போதும்! தமிழகத்தை நோக்கி சீறி பாய்கிறது காவேரி!” எனும் ஆவேசமான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு அண்மையில் முடிவுக்கு வந்த சூழலில், ஜேசன் சஞ்சய் பல்வேறு நேர்காணல்களில் தனது தந்தை குறித்துத் தெரிவித்த கருத்துகள் ஏற்கனவே கவனத்தைப் பெற்றிருந்தன. அந்தத் தொடர்ச்சியாக, தற்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் படங்களோடு ஜேசன் சஞ்சயின் படமும் இடம்பெற்றிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த சுவரொட்டி விவகாரம், தமிழக வெற்றி கழகத்தில் அடுத்தகட்ட வாரிசு அரசியல் தொடங்குவதற்கான அறிகுறியா என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்களிடையே எழுப்பியுள்ளது. விஜய் அவர்களின் அரசியல் பயணத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சயும் முறைப்படி தவெகவில் இணையப் போகிறாரா அல்லது கட்சிப் பணிகளில் நேரடியாகப் பங்கெடுக்கவுள்ளாரா என்ற ஊகங்கள் தீவிரமடைந்துள்ளன. மதுரையில் ஒட்டப்பட்ட இந்த ஒரே ஒரு போஸ்டர், கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தையும், எதிர்த்தரப்பினரிடையே பெரும் விவாதத்தையும் ஒரே நேரத்தில் கிளப்பியுள்ளது.
