BREAKING: 271 பேருடன் தீப்பற்றி எறிந்த பயணிகள் கப்பல்…. 225 பேர் மீட்பு.. 41 பேரைத் தேடும் தீவிரப் பணி…. இந்தோனேசியாவில் நடந்த கொடூரம்….!

By Nanthini on ஆவணி 2, 2026

Spread the love

இந்தோனேசியாவில் 271 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ‘கே.எம். முத்யாரா செந்தோசா-2’ (KM Mutiara Sentosa-2) என்ற பயணிகள் கப்பலில் திடீரென ஏற்பட்ட கோரத் தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஜாவா மாகாணத்தின் சுரபயா நகரிலிருந்து தெற்கு சுலவேசியில் உள்ள மகாசார் நகரை நோக்கிச் சென்ற இக்கப்பல், மதுரா தீவுக்கு அருகிலுள்ள சாப்புடி கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்கும் இந்தோனேசியாவின் முக்கிய கடல் வழியில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தீ விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும் இந்தோனேசியத் தேடுதல் மற்றும் மீட்புப் படையினரும், கடலோரக் காவல் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கப்பலில் இருந்த 271 பேரில் இதுவரை 225 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாயமான 41 பேரைத் தேடும் பணி மீட்புக் கப்பல்கள் மற்றும் உதவிக் குழுக்கள் மூலம் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு அல்லது மின்கசிவு காரணமாக விபத்து நேரிட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த கடல் பகுதி மிகவும் அடர்ந்த போக்குவரத்து வழியைக் கொண்டது என்பதால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் கடல் கொந்தளிப்பாக இருப்பதால் மாயமானவர்களைத் தேடும் பணியில் சவால்கள் நீடிப்பதுடன், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.