தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றது முதலே அவரின் ஒவ்வொரு நகர்வும், ஆடை தேர்வும் சமூக வலைதளங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. ஆட்சிப் பொறுப்பேற்ற ஆரம்ப நாட்களில் கருப்பு கோட்-சூட் அணிந்து வந்தவர், பின்னர் வெள்ளை சட்டைக்கு மாறினார். இருப்பினும், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று மட்டும் பட்டுச் சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி அணிந்து தலைமைச் செயலகத்திற்கு வருவதை அவர் ஒரு வழக்கமாகவே வைத்துள்ளார். மற்ற நாட்களில் ஆடைகளின் பாணி மாறினாலும், இந்த “வெள்ளிக்கிழமை செண்டிமெண்ட்” மட்டும் தொடர்வது தவெகவினர் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்த ஆடை மாற்றத்திற்கும் செண்டிமெண்டிற்கும் பின்னணியில் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, கட்சியின் தொடக்கக் காலத்தில் விஜய் வெள்ளைச் சட்டையும் காக்கி பேண்ட்டும் அணிந்து வந்த நிலையில், ஆட்சிக்கு வந்த பின் அரஜகா பொட்டு வைப்பது உட்படப் பல்வேறு ஜோதிட நம்பிக்கைகள் தொடர்பான விஷயங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே வெள்ளிக்கிழமை வேஷ்டி-சட்டை வழக்கமும் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தவெக ஆட்சி அமைந்தவுடன் தன் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டை முதல்வரின் சிறப்பு தனி அதிகாரியாக விஜய் நியமித்திருந்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து எழுந்த கடுமையான எதிர்ப்புகள் காரணமாக அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும், அவருக்குக் கட்சியினுடைய முக்கியத்துவம் குறையவில்லை. தவெக சார்பில் தேசிய ஊடகங்களில் பேசும் முதன்மை முகமாக அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
மறுபுறம், தமிழகத்தின் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி, “தவெக அரசு டோட்டல் பெயிலியர்” என்று ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் காரசாரமாகத் தாக்கிப் பேசி வருகின்றனர். ஆட்சியின் செயல்பாடுகளை விட ஜோதிட நம்பிக்கைகளுக்கே முதல்வர் விஜய் அதிக முக்கியத்துவம் தருகிறார் என்ற விமர்சனங்களும் தற்போது தீவிரமடைந்து வருகின்றன.
