அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி, மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகத்திற்கு அதிமுக கிளியனூர் ஒன்றிய செயலாளர் ஏ.டி.பக்தவச்சலம் பகிரங்க சவால் விடுத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே நடைபெற்ற கிளியனூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அவர், கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கழகத்தைக் காத்து வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உட்கட்சித் துரோகங்கள் நடைபெற்று வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வந்துவிடக் கூடாது என்ற துரோக நோக்கத்துடன் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட சுமார் 25 மாவட்ட செயலாளர்கள் செயல்பட்டதாக பக்தவச்சலம் சாடினார். இவர்கள் தங்களின் பினாமிகளுக்குத் தொகுதிகளைப் பெற்றுத் தந்து, சரியான முறையில் தேர்தல் பணிகளைச் செய்யாமல் கழக வேட்பாளர்களைத் தோற்கடித்துள்ளனர் என்றும், இதன் காரணமாகவே தமிழகத்தில் சுமார் 25 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது என்றும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.
மேலும், தொண்டர்கள் பலருக்கும் வாய்ப்பளிக்கவே மாவட்டங்களை மூன்றாகப் பிரித்து பொதுச்செயலாளர் நடவடிக்கை எடுத்தார் என்றும், ஆனால் தான் மட்டுமே ‘குறுநில மன்னராக’ இருக்க வேண்டும் என்ற பேராசையால் சி.வி.சண்முகம் இதனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருவதாகவும் சாடினார். “கழகத்திற்கும் எடப்பாடியாருக்கும் தான் துரோகம் செய்யவில்லை என்றால், சி.வி.சண்முகம் தனது பிள்ளைகளுடன் முருகன் கோயிலுக்கு வரட்டும்; நானும் என் பிள்ளைகளுடன் வருகிறேன். கழக வேட்பாளர்களைத் தோற்கடிக்கவில்லை என்று கோயிலில் இறங்கி சத்தியம் செய்ய அவர் தயாரா?” என்று அவர் நேரடி சவால் விடுத்தார்.
எடப்பாடி பழனிசாமி சாதாரணக் கிளைச் செயலாளராகத் தொடங்கி, தன் உழைப்பால் பொதுச்செயலாளராக உயர்ந்தவர் என்றும், அவரைப் பற்றிப் பேச சி.வி.சண்முகத்திற்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பா.ம.க. கூட்டணியைத் தொடர்ந்து தடுத்து வரும் சி.வி.சண்முகம், முன்னாளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவாலும் கட்சி விரோத நடவடிக்கைக்காக ஓரங்கட்டப்பட்டவர் என்று விமர்சித்த பக்தவச்சலம், 99 சதவீத தொண்டர்கள் எடப்பாடியாரின் பக்கமே உறுதியாக இருப்பதாகவும், வரும் காலத்தில் அவர் மீண்டும் முதலமைச்சராக அமர்வது உறுதி என்றும் அழுத்தமாகக் கூறினார்.
