தவெக கூட்டணியில் இணையும் பாமக?…. வெளிப்படையாக போட்டுடைத்த அன்புமணி… தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்….!

By Nanthini on ஆடி 30, 2026

Spread the love

பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக வெற்றி கழக அரசுடன் கூட்டணி அமையப் போவதாக உலா வரும் தகவல்கள் அனைத்துமே வெறும் வதந்திகள் எனத் தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தவெக தலைமையிலான அமைச்சரவையில் பாமக இணையப் போவதாக அரசியல் களத்தில் தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வந்த ஊகங்களுக்கு இதன் மூலம் அவர் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி நடவடிக்கைகளில் இருந்து விலகித் தனித்தே இயங்கி வந்தது. இந்நிலையில், தவெக அரசின் அமைச்சர்களுடனான அன்புமணியின் சந்திப்புகள் மற்றும் சுமுகமான அணுகுமுறை காரணமாக, பாமக ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவதாகவும் அமைச்சரவையில் இடம்பெறப்போவதாகவும் தகவல்கள் பரவத் தொடங்கின.

   

சென்னை பாமக பொதுக்குழுவில் பேசிய அன்புமணி, “நாங்கள் அளிக்கும் ஆக்கப்பூர்வமான யோசனைகளைத் தமிழக அரசு ஏற்றுச் செயல்படுத்துகிறது; இதுவே ஒரு நல்ல அரசின் அடையாளம்” என்று பாராட்டினார். அதேவேளையில், அரசுக்கு ஆலோசனைகள் வழங்குவதை வைத்துக்கொண்டு கூட்டணி பேசி முடித்துவிட்டதாகவும், எத்தனை அமைச்சரவை பதவிகள் என்று பரப்பப்படும் செய்திகள் அனைத்துமே வதந்திகள் என்றும், தொண்டர்கள் இதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

   

ஆளுங்கட்சியான தவெகவுக்கு நல்வழிகாட்டும் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகவே பாமக செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், கட்சியின் முதன்மை இலக்கு 2031 பேரவைத் தேர்தல் தான் என்பதையும் உறுதிபடத் தெரிவித்தார். இதன் மூலம், விசிகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டு பாமகவை இணைக்க தவெக முயல்வதாக வெளியான யூகங்களுக்கும் அன்புமணி ராமதாஸின் இந்த அதிரடி பேச்சு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.