ரூ.100 கோடி கோவில் நிலத்தைத் தொடர்ந்து ரூ.60 கோடி நகராட்சி நிலமும் அவுட்…. சிக்கிய சார் பதிவாளர் ஜஸ்டின்… அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மை…!

By Nanthini on ஆடி 29, 2026

Spread the love

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான தண்டபாணி மடத்து நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் சூழலில், தற்போது பழனியில் மேலும் ஒரு ரூ.60 கோடி மதிப்பிலான அரசு நில மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கோயில் நில மோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் என்பவரே, பழனி நகராட்சிக்குச் சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தையும் தனியாருக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளதாகப் புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 6-ஆம் தேதி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியில் இருந்தபோது, நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தனது மகன் மனோஜ் குமாருக்குப் பழனி நகராட்சி எல்லைக்குட்பட்ட நிலத்தை விற்பனை செய்ததாகப் பத்திரம் (எண்: 1437) பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டா உள்ளிட்ட அரசு ஆவணங்களில் தெளிவாக ‘சர்க்கார் புறம்போக்கு’ என்று குறிப்பிடப்பட்டுள்ள இந்த நிலத்தின் தற்கால மதிப்பு அந்தப் பத்திரத்தில் ரூ. 2 கோடியே 67 லட்சத்து 36 ஆயிரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை முழுமையாகச் சரிபார்க்காமல் இந்த நிலம் தனியாருக்குப் பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

   

இந்த மோசடியின் தொடர்ச்சியாக, அதே நாளில் அடுத்த பத்திர எண்ணில் மனோஜ் குமார் அந்த நிலத்தை பாஜக பிரமுகரான சவுந்தரபாண்டி என்பவருக்குக் கிரையம் செய்து கொடுத்துள்ளார். ஒரே நாளில் ஒரே சொத்திற்கு அடுத்தடுத்து பதிவு செய்யப்பட்ட இந்த இரண்டு பத்திரங்களில், முதல் பத்திரத்தில் ரூ. 2.67 கோடி எனக் குறிப்பிடப்பட்ட சொத்தின் மதிப்பு, இரண்டாவது பத்திரத்தில் வெறும் ரூ. 20 லட்சம் எனக் கடுமையாகக் குறைத்துக் காட்டப்பட்டிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் ஒரே அதிகாரி முன்னிலையில் நடைபெற்ற இந்த அடுத்தடுத்த பதிவுகள் மிகப்பெரிய அதிகார முறைகேட்டைச் சுட்டிக்காட்டுகின்றன.

   

ஏற்கனவே சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் மடத்து நில மோசடி வழக்கில் சேதுபதி, வெள்ளத்துரை உட்பட 4 பேரைச் சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ள நிலையில், தற்போது இந்த புதிய அரசு புறம்போக்கு நில மோசடியும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே, கடந்த 6-ஆம் தேதி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்த அனைத்துப் பத்திர ஆவணங்களையும் பதிவுத்துறை அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களைச் சட்டப்படி உடனடியாக ரத்து செய்து அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.