தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவாக நியாயவிலைக்கடைகள் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள 34,916 நியாயவிலைக்கடைகள் வழியாக, சுமார் 2 கோடியே 28 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, மானிய விலையில் துவரம்பருப்பு, சர்க்கரை, கோதுமை மற்றும் பாமாயில் போன்றவை விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் மக்களுக்குப் பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது.
இருப்பினும், ஒரு சில நியாயவிலைக்கடைகளில் உணவுப் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுவதாகவும், சில இடங்களில் தரமற்ற மற்றும் காலாவதியான சர்க்கரை, பருப்பு விநியோகிக்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இக்குறைகளைக் களைந்து, மக்களுக்குத் தரமான உணவுப் பொருட்களைச் சீராக விநியோகிப்பதை உறுதி செய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களைப் பாக்கெட்டுகளில் அடைத்து வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
அரிசி மற்றும் கோதுமை போன்ற பெரிய அளவிலான பொருட்களை பாக்கெட்டுகளில் வழங்குவது சவாலானது என்பதால், சர்க்கரை மற்றும் துவரம்பருப்பை மட்டும் பாக்கெட்டுகளில் அடைத்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாமாயில் பாக்கெட்டுகளில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இப்புதிய நடைமுறையின் மூலம் பொருட்களின் தரம், பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி மற்றும் தயாரிப்பாளர் விவரங்கள் பாக்கெட்டின் மீது தெளிவுபட அச்சிடப்படும். இதன் மூலம் எடைக்குறைவு மற்றும் தரம் தொடர்பான புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 2.30 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர் என்பதால், இதற்கான கூடுதல் நிதிச் செலவினங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் முதல் இத்திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
