உக்ரைன் நாட்டின் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள M.V. AMIR1 எனும் வணிக கப்பலில் 13 இந்தியர்கள் உட்பட மொத்தம் 15 மாலுமிகள் ஆபத்தான சூழலில் சிக்கி தவித்து வருகின்றனர். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அத்துறைமுகப் பகுதிகளை இலக்கு வைத்துத் தொடர்ச்சியாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் எந்த நேரத்திலும் தங்கள் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் மாலுமிகள் உறைந்து போய் உள்ளனர்.
இச்சம்பவம் குறித்துக் கவலை தெரிவித்துள்ள இந்திய மாலுமிகள் சங்கம், கப்பலைச் சுற்றிப் புகை மூட்டமாக இருக்கும் காட்சிகளை வெளியிட்டுப் மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. போர் தீவிரமடைந்துள்ள சூழலில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களை உடனடியாக தாயகம் அழைத்து வர வெளியுறவுத்துறை அமைச்சகமும் கப்பல் நிறுவனமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் இதே பகுதியில் நடந்த தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.
