“விஜய்க்கு ஆபத்து.. துரோகம் செய்ய போறாங்க”…. 15 வருஷ பதவிய தூக்கி எறிந்தவன் உன்ன விட்டுடுவானா?… பரபரப்பை கிளப்பிய ராஜேந்திர பாலாஜி….!

By Nanthini on ஆடி 26, 2026

Spread the love

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக அரசியல் களம் மற்றும் தவெக குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதிமுகவிலிருந்து விலகி பிற கட்சிகளுக்குச் செல்பவர்கள் எங்கு சென்றாலும் சோபிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், அதிமுகவைத் தூக்கி எறிந்தவர்கள் தவெகவையும் எளிதில் கைவிடத் தயங்கமாட்டார்கள் என்பதால், தவெக தலைவரும் முதல்வருமான விஜய்யும் அதன் நிர்வாகிகளும் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.

தவெக ஆட்சி அமைத்ததற்குப் பிறகு, அக் கட்சி வெற்றி பெற உழைத்த உண்மையான தொண்டர்களை ஓரம் தள்ளிவிட்டு, அதிமுகவிலிருந்து சென்ற சுயநலவாதிகள் பதவிகளைக் கைப்பற்ற முயல்வது அப்பட்டமான சந்தர்ப்பவாதம் என்று சாடியுள்ளார். 10 ஆண்டுகள் அமைச்சராகவும் 15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி அனுபவித்துவிட்டு, தங்களை வளர்த்துவிட்ட தாய் இயக்கமான அதிமுகவையே தூக்கி எறிந்தவர்களால் தவெகவிற்கு எந்தப் பயனும் இல்லை என்றும், அப்படிப்பட்டவர்களைத் தவெக நம்பக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

   

அதிமுகவின் தற்போதைய நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் இயக்கம் மிகவும் வலுவாகவும் பலமாகவும் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரின் வழியில், தனக்கு எதிர்க்குரல் எழுப்புபவர்களையும் அனுசரித்துச் செல்லும் பக்குவம் எடப்பாடியாருக்கு உண்டு என்றும், அதையும் மீறி வெளியேறியவர்கள் வெளியில் சென்று வீணாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் காட்டமாகக் கூறியுள்ளார்.

   

மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் ராஜினாமா குறித்த கேள்விக்கு, நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர் சமுதாயத்தின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நியாயமான நடவடிக்கை என்று விளக்கம் அளித்தார். இதை மத்திய அரசின் அடிபணிதலாகப் பார்க்காமல், மாணவர்களின் போராட்டத்திற்குத் தரப்பட்ட மரியாதையாகப் பார்க்க வேண்டும் எனக் கூறிய அவர், வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனது தனி முத்திரையைப் பதித்து மாபெரும் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.