நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ சார்பிலும் இளைஞர்கள் சார்பிலும் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. கடந்த ஜூலை 20 அன்று தடையை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடிடியில் பலர் காயமடைந்தது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, சிஜேபி கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ் மற்றும் ஆசுதோஷ் ரங்கா ஆகியோர் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாணவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு இணங்கியதைத் தொடர்ந்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. “அமைதியான வழியில் போராடினால் ஜனநாயகத்தில் எதுவும் சாத்தியம் என்பதற்கு இந்த வெற்றியே சான்று” என சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜிநகரில் உள்ள அபிஜித் தீப்கேவின் வீட்டில் அவரது தாய் அனிதா தீப்கே செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்கப் பேசுகையில், “என் மகனின் நேர்மைக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி இது. போராட்டம் நடைபெற்ற நாட்களில் அவன் பாதுகாப்பு குறித்த பயத்தால் தூக்கமில்லாமல் தவித்தேன். தினமும் காலையில் போனை பார்க்கவே பயமாக இருக்கும். ஆனால் இன்று என் கண்களில் வருவது ஆனந்தக் கண்ணீர். அவன் வீட்டிற்கு வந்ததும் நெகிழ்ச்சியுடன் ஆரத்தி எடுத்து வரவேற்பேன்” என்று உணர்ச்சிவசப்பட்டார்.
அபிஜித்தின் தந்தை பகவான்ராவ் தீப்கே பேசுகையில், அரசியல் பின்னணி இல்லாத தங்கள் குடும்பம் சந்தித்த அச்சுறுத்தல்களையும் மன அழுத்தத்தையும் விவரித்தார். “அரசியலில் அவன் நுழைந்தபோது நாங்கள் மிகவும் பயந்தோம். போராட்டத்தின் போது அவன் தாக்குதலுக்கு உள்ளான காட்சிகள் எங்களை உலுக்கிவிட்டன; ஒரு கட்டத்தில் அவனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்றும் அஞ்சினோம். ஆனால், கடவுளின் அருளாலும் இளைஞர்களின் ஆதரவாலும் இன்று வெற்றி கிடைத்துள்ளது. இனி அவன் பத்திரமாக வீட்டிற்கு வந்து எங்களோடு இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” எனக் குறிப்பிட்டார்.
