அன்புமணி போட்ட ரெட் கார்டு… ஆட்டத்தை தொடங்கிய அருள்…. பாமகவில் வெடிக்கும் அடுத்த பூகம்பம்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…!

By Nanthini on ஆடி 25, 2026

Spread the love

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சேலம் அருள் பாமகவிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அவர் எந்தக் கட்சிக்குச் செல்லப் போகிறார் அல்லது புதிய கட்சி தொடங்கப் போகிறாரா என்ற பலகட்ட ஊகங்கள் தமிழக அரசியலில், குறிப்பாக வட மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தவெக, திமுக, அதிமுக எனப் பல முனைகளிலும் தகவல்கள் கசிந்த நிலையில், அவர் தற்போது முற்றிலும் எதிர்பாராத ஒரு புதிய அரசியல் நகர்வை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாமகவில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் முடிவுக்கு வந்து இருவரும் இணைந்த பிறகும், அன்புமணியின் கதவுகள் சேலம் அருளுக்கு அடைக்கப்பட்டே இருந்தன. பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் அன்புமணியிடம் இருந்து சாதகமான பதில் வராத சூழலில், வேறு வழியின்றி மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்திற்கு அருள் தள்ளப்பட்டார்.

   

இதனைத் தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் முக்கிய தலைமைகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும், சேலம் அருள் தரப்பில் முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை இரு கட்சிகளின் தலைமைகளும் ஏற்றுக்கொள்ளாததால், அந்தப் பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் முறிவில் முடிந்தன.

   

இந்தச் சூழலில்தான், புதுச்சேரி முதலமைச்சர் என்.ஆர். ரங்கசாமியின் தலைமையிலான என்.ஆர். காங்கிரசில் இணைய அருள் முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துவிட்டதாகவும், விரைவில் அவர் முறைப்படி கட்சியில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் என்.ஆர். காங்கிரஸை வலுப்படுத்தும் முக்கியப் பொறுப்பு அவருக்கு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

 

சேலம் அருளின் இந்த அதிரடி நகர்வு வட மாவட்டங்களில் பாமகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர் பக்கம் நகரும் பட்சத்தில், அது தர்மபுரி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பாமகவின் பாரம்பரியக் கோட்டைகளில் புதிய சவால்களை உருவாக்க வாய்ப்புள்ளது.