பாமக நிர்வாகி ஒருவர் செளமியா அன்புமணி விரைவில் அமைச்சராக வேண்டும் என்று வாழ்த்திப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் பேசப்பட்ட இந்த வாழ்த்தை, மேடையில் இருந்த செளமியா அன்புமணி சிரித்தபடியே ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தவெக அரசுக்கு ஆதரவளித்து காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில், பாமக நிர்வாகியின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தவெக அரசுக்கு சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவதால், ஆட்சியின் நிலைத்தன்மையை உறுதி செய்ய பாமகவின் ஆதரவைப் பெற தவெக முயல்வதாகக் கூறப்படுகிறது. பாமக தலைவர் அன்புமணியை தவெக அமைச்சர் ஆனந்த் அன்போடு வரவேற்றதும், ஆதவ் அர்ஜுனாவுடனான நெருக்கமும், இரு கட்சிகளுக்கும் இடையிலான இணக்கத்தை வெளிப்படுத்துகின்றன. தவெகவின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி முன்பே அன்புமணியுடன் பணியாற்றியவர் என்பதும், தவெக – பாமக இடையிலான இந்த நெருக்கத்திற்கு ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.
பாமக வசம் 4 எம்.எல்.ஏ-க்கள் இருக்கும் சூழலில், செளமியா அன்புமணியை அமைச்சராக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருவதாகத் தெரிகிறது. ஒருவேளை பாமக அதிகாரப்பூர்வமாக தவெக கூட்டணியில் இணைந்து அமைச்சரவையில் இடம்பெற்றால், ஏற்கனவே அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் விசிகவின் நிலைப்பாடு என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நகர்வுகள் அனைத்தும் தமிழக அரசியலில் விரைவில் ஒரு புதிய கூட்டணி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
