காசீப்பூர் மாவட்டம் கரண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன், எதிர்பாராதவிதமாகத் தவறி ஆழமான நதிநீரில் விழுந்தான். நீரின் வேகத்தில் தம்பியை மூழ்குவதைக் கண்ட அவனது 5 வயது அக்கா, யோசிக்காமல் உடனடியாகத் தம்பியைக் காப்பாற்ற ஆற்றில் குதித்தாள். துரதிர்ஷ்டவசமாக, இருவராலும் நீரின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் குறுகிய நேரத்திலேயே நீரில் மூழ்கினர்.
ஆற்றின் மறு கரையில் அமர்ந்திருந்த ஒரு கிராமத்து வாலிபர், குழந்தைகள் மூழ்குவதைக் கண்டு கூச்சலிட்டு எச்சரித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி கிராம மக்கள் விரைந்து வந்து, ஆற்றில் இறங்கி இரு குழந்தைகளையும் ஒவ்வொன்றாக வெளியே மீட்டனர். முதலுதவியாகத் தங்களது கையாலேயே ‘சி.பி.ஆர்’ கொடுத்துச் சுவாசத்தை மீட்க முயன்ற மக்கள், பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைந்தனர். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் இரு குழந்தைகளும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
மருத்துவமனையில் தன் இரு குழந்தைகளையும் பறிகொடுத்த தாய், கைகளை நீட்டி அலறியபடி “என் குழந்தைகளைத் திருப்பிக் கொடுங்கள்” எனக் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் உரைய வைத்தது. இச்சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
