தமிழக அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்குச் சாதிச் சான்றிதழ்கள் விரைவாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், SC சான்றிதழ்களை விண்ணப்பித்த 2 நாள்களுக்குள்ளும், ST சான்றிதழ்களை ஒரு வாரத்திற்குள்ளும் வழங்கக் கடுமையான ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளைச் சமூக நீதித்துறை வாயிலாக வெளியிட்டுள்ளது.
எவ்விதக் கால தாமதமும் இன்றித் தகுதியான பயனாளிகளுக்குச் சான்றிதழ்கள் சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அரசு, இதில் அலட்சியம் காட்டும் அல்லது சான்றிதழ் வழங்கக் கால தாமதம் செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, அரசு சேவைகளைப் பெறுவதில் அவர்களுக்கு இருந்த தேவையற்ற அலைக்கச்சல்களைக் குறைத்து, உரிய நேரத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் சலுகைகளை அடையப் பெரிதும் வழிவகுக்கும்.
