தமிழக முதல்வர் விஜய்யின் திரைப்பயணத்தில் கடைசிப் படமாக உருவெடுத்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே இன்று திரையரங்குகளில் வெளியானது. பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனது, தணிக்கைக் குழுவின் ‘ஏ’ சான்றிதழ் சிக்கல், இணையத்தில் முழுப் படம் கசிந்தது எனப் பல தடைகளைக் கடந்து படம் வெளியானதால், தமிழகம் முழுவதிலும் உள்ள தவெக கட்சியினரும் விஜய் ரசிகர்களும் அதனை மிகுந்த உற்சாகத்துடன் திருவிழா போலக் கொண்டாடிப் பார்த்து ரசித்தனர்.
ஆனால், இந்த மகிழ்ச்சியான தருணத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியில் ஒரு பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் கண்டுவிட்டு பாண்டியராஜன் (32), வெங்கடேஷ் (27), மற்றும் சிபி சக்கரவர்த்தி (22) ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் நான்கு வழிச்சாலையில் திரும்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாகப் பின்னால் வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளாகினர். இந்த பயங்கர விபத்தில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திரைப்படம் பார்த்துவிட்டுத் திரும்பிய வழியில் 3 இளம் விஜய் ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
