கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் 36 வயது ஆசிரியை, தனது வீட்டின் குளியலறையில் குளித்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இதை வெளியே சொல்லாமல் இருக்க மிரட்டிய அவர், பின்னர் அந்த வீடியோவை காட்டி ஆசிரியைக்கு கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், வீடியோவை அழித்து விடுவதாக நம்ப வைத்து பலமுறை பலாத்காரம் செய்ததோடு, ரகசியமாக மீண்டும் வீடியோ எடுத்து அவரிடமிருந்து ரூ.47,000 வரை பணமும் பறித்துள்ளார்.
இதனிடையே ஜெயகாந்தன் வெளிநாடு சென்ற நிலையில், அவரது நண்பரான ஜெகன் என்பவரும் இந்த விஷயத்தை அறிந்து, அந்த வீடியோவைக் காட்டி, மிரட்டி பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியை தனது கணவரிடம் கூறியபோது, இருவரும் சேர்ந்து கணவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி பாதிக்கப்பட்ட ஆசிரியை, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பரபரப்பான புகார் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில், தக்கலை காவல்துறையினர் தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல், பலாத்காரம் செய்தல், மறைந்திருந்து ரகசியமாக வீடியோ எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் ஜெயகாந்தன் மற்றும் ஜெகன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
