கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் மாலேபென்னூர் பகுதியைச் சேர்ந்த ஈரம்மா (58) என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருந்ததால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உடற்கூறாய்வுக்குப் பின் நிலத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில், கடந்த ஜூலை 18 நள்ளிரவில் ஈரம்மாவின் மகன்களான மஞ்சுநாத் மற்றும் வெங்கடேஷா ஆகியோர் அரசு அனுமதியின்றி தாயின் சடலத்தைத் தோண்டி எடுத்து, மூட்டையில் கட்டி இருசக்கர வாகனத்தில் தாவணகெரே நோக்கி ரகசியமாகக் கடத்த முயன்றனர்.
அப்போது ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் இருவரையும் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டபோது, மூட்டைக்குள் சடலம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்துச் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், மரண வழக்கிலிருந்து தப்பவும் ஆதாரங்களை அழிக்கவும் சடலத்தைக் கடத்த முயன்றனரா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
