“வடநாட்டு இளைஞர்கள் வீதியில்… தமிழ்நாட்டு இளைஞர்கள் தியேட்டர் வாசல்லயா?”… கொந்தளித்த சீமான்… தவெக அரசின் ‘இரட்டை வேடம்’ அம்பலம்….!

By Nanthini on ஆடி 23, 2026

Spread the love

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்வில் நிகழ்ந்துள்ள குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் வீதியில் இறங்கி மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகத் தமிழகத்திலும் சென்னை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல நகரங்களில் மாணவர் அமைப்பினரும் இளைஞர்களும் நீட் தேர்வுக்கு எதிராகத் தன்னெழுச்சியாகப் போராடி வருகின்றனர். ஆனால், இப்போராட்டங்களை காவல்துறையைக் கொண்டு ஒடுக்கும் ஆளும் தவெக அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

   

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் மாணவர்கள் அறப்போராட்டம் நடத்த முனையும்போது, அதை அடக்க நினைப்பது அப்பட்டமான ஜனநாயகத் துரோகம் என்று சாடியுள்ளார். திரையில் ‘ஜனநாயகன்’ என்று பெயர் சூட்டிக் கொள்ளும் முதல்வர் விஜய், தரையில் போராடும் மாணவர்கள் மீது அரச வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதா என்றும், திரைப்படத்தில் மட்டும்தான் ஜனநாயகனா என்றும் அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். வடமாநில இளைஞர்கள் கல்வியுரிமைக்காகக் களத்தில் நிற்கும்போது, தமிழ்நாட்டு இளைஞர்களைத் திரையரங்க வாசலில் நிறுத்தி வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத பெருங்கொடுமை என்றும் விமர்சித்துள்ளார்.

   

மேலும், டெல்லியில் நடைபெறும் போராட்ட அடக்குமுறையைக் கண்டிப்பது போலக் காட்டிக்கொண்டு, தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களை தவெக அரசு ஒடுக்கப் பார்ப்பது இரட்டை வேடம் என்றும் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவைக் கொள்கை எதிரி என்று கூறிக்கொண்டு, தமிழக அரசு மறைமுகமாக அவர்களுக்குச் சேவை செய்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரே மாதிரியான கற்றல் வாய்ப்புகளும் வசதிகளும் இல்லாத இந்த நாட்டில், ‘நீட்’ போன்ற ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்துவதே சமத்துவத்திற்கு எதிரானது என்பதால், இத்தேர்வு முறையை முற்றாக நீக்க வேண்டும் என்பதே நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களை விட, மாணவர்களும் இளைஞர்களும் வீதிக்கு வந்து நடத்தும் போராட்டங்களே ஜனநாயகப் புரட்சியாக வெடித்து ஆளும் வர்க்கத்தை அடிபணிய வைக்கும் என்று குறிப்பிட்ட சீமான், அநீதிக்கு எதிராகப் போர்க்குணத்துடன் களத்தில் நின்று போராடும் அனைத்துத் தம்பி, தங்கைகளுக்கும் தனது புரட்சிகரமான வாழ்த்துகளையும் அன்பையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறி, இப்போராட்டத்திற்குத் தனது முழு ஆதரவையும் அளித்துள்ளார்.