தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருத்தணி முருகன் கோவிலில் தங்கத் தேர் இழுத்து, 6 அடி உயர வெள்ளி வேலைக் காணிக்கையாகச் செலுத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். அதன் பின்னர் ஊடகங்களைச் சந்தித்த அவர், கோவில்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், மேகதாது அணைக் கட்டும் முயற்சியைக் கண்டித்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஒகேனக்கல்லில் தேமுதிக சார்பில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெறும் என்றும், மின் கட்டண உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முதலமைச்சர் விஜய் தொடர்பாகப் பேசிய அவர், சினிமாவில் சொன்ன கருத்துகளை நிஜ வாழ்க்கையிலும் செயல்படுத்திக் காட்டினால் மட்டுமே மக்கள் அவரை உண்மையிலேயே “ஹீரோவாக” ஏற்பார்கள் என்றும், விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். திமுக சட்டமன்ற உறுப்பினர் கைது நடவடிக்கை குறித்துப் பேசிய அவர், இது அரசின் அரசியல் பழிவாங்கும் போக்கைக் காட்டுவதாகக் குற்றம்சாட்டினார். வரவிருக்கும் பட்ஜெட் மக்களுக்கான எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
