கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த முகேஷ் என்ற எலக்ட்ரீசியனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் இடையே திருமணத்திற்கு மீறிய உறவு இருந்துள்ளது. அப்பெண் தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாகக் கூறியதை அடுத்து, இருவரும் வெளியூர்களுக்குச் சென்று தங்கி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் பெண்ணின் கணவர் அவரைத் தேடிக் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில், ஆத்திரமடைந்த முகேஷ் அப்பெண்ணைத் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தம்பதியினர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான்சன், முகேஷை காவல் நிலையத்திற்கு வரவழைத்து எச்சரித்ததுடன், அவரிடமிருந்து ரூ5,000 லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் வாங்கிய விவகாரம் வெளியில் தெரியவந்ததால், அச்சமடைந்த காவல் துறையினர் அந்தப் பணத்தைத் திரும்பக் கொடுக்க முயன்றுள்ளனர். அதன்படி, தலைமை காவலர் நாகராஜன் முகேஷைத் தொடர்புகொண்டு, SI ஜான்சன் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுப் பேசியுள்ளார்.
அப்போது முகேஷ், “பணம் எனக்கு வேண்டாம், இந்தப் பிரச்சினையிலிருந்து விடிவு கிடைத்தால் போதும்; அப்பெண் தான் திருமணம் ஆகவில்லை எனக் கூறி என்னிடம் பழகினார்” எனப் புலம்பும் உரையாடல் ஆடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
