தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 60 நாள் ஆட்சியில், முதல்வர் ஜோசப் விஜய்யை அவதூறாகவும் மிரட்டும் தொனியிலும் பேசியதாக திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் இன்று காலை கைது செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதேபோன்று முதல்வர் விஜய்யைப் பற்றிப் பேசியதற்காக அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த நடவடிக்கை தொடர்கிறது. சமீபத்தில் பழனி கோவில் நில விவகாரம் தொடர்பான சமூக வலைத்தளப் பதிவுகளுக்காக திமுக ஆதரவாளர் மற்றும் அதிமுக நிர்வாகி ஆகியோர் கைது செய்யப்பட்டது கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் சூழலில், இக்கைது சம்பவம் தவெக அரசு மீதான விமர்சனங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “முந்தைய திமுக அரசாங்கமாவது 2, 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இத்தகைய கைது நடவடிக்கைகளை தொடங்கியது, ஆனால் இந்த அரசு வந்த 60 நாட்களிலேயே தொடங்கிவிட்டது” என்று சாடினார். மேலும், மாநிலத்தில் நாள்தோறும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், திரைப்படக் காட்சிகள் மட்டுமே ஆட்சியாக நடப்பதாகவும், படத்தில் மட்டுமே ஜனநாயகம் இருக்கிறது தவிர மக்கள் மத்தியில் ஜனநாயகம் இல்லை என்றும், ஒரு முதல்வர் தனக்கு வரும் விமர்சனங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தவெக அமைச்சர்களின் செயல்பாடுகளையும் நயினார் நாகேந்திரன் கிண்டல் செய்து விமர்சித்தார். தவெக அமைச்சர் விக்னேஷ், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்ப்பதற்காக 3 மணி நேரம் பழைய ரசிகராகச் செயல்பட முதல்வரிடம் விடுமுறை கேட்டு அனுமதி கிடைக்காத நிலையிலும், போத்தனூரில் படம் பார்க்கத் திட்டமிட்டுள்ளதாகப் பேசிய இணையப் பதிவைக் குறிப்பிட்டுப் பேசினார். “அமைச்சர்கள் ஆட்சிப் பணிகளை விடுத்து படம் பார்க்க விடுமுறை கேட்கிறார்கள்; இவர்களை வைத்துக்கொண்டு நாட்டில் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பிய அவரது இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
