தவெக அரசின் அதிரடி ஆக்‌ஷன்… முறைகேடு புகாரால் 2,339 டெண்டர்கள் அதிரடி ரத்து…! ஒப்பந்ததாரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு…!!

By Devi Ramu on ஆடி 19, 2026

Spread the love

தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கடந்த மே 10-ஆம் தேதி முதல் ஜூலை 17-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மிக முக்கியமான நிர்வாக அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடந்த முந்தைய ஆட்சிக்காலத்தில் இறுதி கட்டத்தில் அவசர அவசரமாகக் கோரப்பட்ட பல்வேறு அரசுத் துறைகளின் 2,339 டெண்டர்களைத் தற்போதைய தவெக அரசு அதிரடியாக ரத்து செய்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறிப்பிட்ட சில பெரு நிறுவனங்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் மட்டுமே சாதகமாக விதிகளைத் தளர்த்தி, பல கோடிகள் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு வெறும் 7 முதல் 15 நாட்களுக்குள் குறுகிய கால டெண்டர்கள் கோரப்பட்டதாக எழுந்த அடுக்கடுக்கான முறைகேடு புகார்களின் அடிப்படையில் விரிவான தணிக்கை மற்றும் மறுஆய்வு நடத்தப்பட்டு இந்த பிரம்மாண்ட ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

   

இந்த அதிரடி நடவடிக்கையின் காரணமாகச் சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், நெடுஞ்சாலைகள், பொதுப்பணித்துறை (PWD) மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றின் கீழ் திட்டமிடப்பட்டிருந்த சாலை அமைத்தல், மேம்பாலப் பணிகள் போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

   

இருப்பினும், பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பணிகள் முற்றிலும் முடங்கிவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, 253 அவசரப் பணிகளுக்குப் புதிய வெளிப்படையான விதிகளுடன் மறு டெண்டர் கோரப்பட்டு பணிகள் தற்பொழுது முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதே நேரத்தில், எந்தவித விதிமீறல்களுமின்றி முறையாகச் சமர்ப்பிக்கப்பட்ட 10,560-க்கும் மேற்பட்ட இதர டெண்டர்களுக்குத் தங்குதடையின்றி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் டெண்டர் கோருவதில் கடுமையான டிஜிட்டல் வழிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் அரசுத் தரப்பில் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.