விஜய் அரசை கவிழ்க்க சதி?… அது என்ன?… ‘ப்ராஜெக்ட் மேகாலயா’… தமிழக அரசியலை உலுக்கும் நள்ளிரவு விசாரணை… பொங்கியெழுந்த திமுக…!

By Visaka on ஆடி 17, 2026

Spread the love

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசை கவிழ்க்க, “ப்ராஜெக்ட் மேகாலயா” என்ற பெயரில் சதித் திட்டம் தீட்டப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசை கவிழ்க்கும் நோக்கில் சுமார் 15 எம்.எல்.ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து, அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜா, தனது கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களிக்க தனக்கு ₹35 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அளித்த புகாரின் பேரிலேயே இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் சென்னையைச் சேர்ந்த பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சியின் மூத்த ஊடகவியலாளர் ஒருவரிடம் காவல்துறை அண்மையில் தீவிர விசாரணை நடத்தியுள்ளது. இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான, கருத்துக்கணிப்புக் குழுவை நடத்தி வரும் யூடியூபர் திருநாவுக்கரசுடன் அந்த ஊடகவியலாளர் குறுந்தகவல்கள் மூலம் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக கடந்த ஜூலை 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அவரிடம் நள்ளிரவு வரை விசாரணை நடத்தப்பட்டதோடு, அவரது செல்போனும் தடயவியல் பரிசோதனைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், முறையான நடைமுறைகள் இன்றி செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதை பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி என சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டித்துள்ளது.

   

இந்த குதிரை பேர விவகாரம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோருக்கும் காவல்துறை விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், திமுக இக்குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக தவெக அரசு பொய்யான புகார்களைப் பரப்புவதாகவும், இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.